க்டோபர் 14-ந் தேதி மாலை மங்கிய நேரத்தில் வேலூர் கோட்டை அருகிலுள்ள மாங்காய் மண்டி பகுதியில் ஒரு இளம்பெண் ஓடினார். அவரை வேறொரு பெண் துரத்திச் சென்று ரோட்டிலேயே போட்டு அடித்து உதைக்க... அந்த இளம்பெண் கதறிய கதறலைப் பார்த்து பரிதாபப்பட்டு அடித்த பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டனர் அப்பகுதி மக்கள். என்ன பிரச்சினையென கேட்டபோது இருவரும் புரியாத பாஷையில் பேசினர். மொழி புரியாத உள்ளூர் மக்கள் விவகாரத்தை vellorehospitalவேலூர் வடக்கு காவல்நிலையத்துக்கு தகவல் கூறினர். உடனடியாக அங்குவந்த போலீஸார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தபோது...

Advertisment

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் 30 வயதான முஸ்கானா. உறவினர் ஒருவருக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்படி வந்தவர் இங்குள்ள விபச்சாரக் கும்பலிடம் சிக்கியுள்ளார். அப்படி சிக்கியவர் பின்னர் மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அகதியாக வந்து தஞ்சமடையும் வங்கதேசத்து குடும்பத்தில் உள்ள இளம்பெண்களை குறிவைத்து "வேலை வாங்கித் தருகிறேன்' என தமிழகம் அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அப்படித்தான் 16 வயதான இளம்பெண்ணை வேலூருக்கு அழைத்துவந்து அந்த பிரபல மருத்துவமனைக்கு எதிரில் காந்தி ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த, அந்த லாட்ஜில் இருந்து தப்பி ஓடியவரை இவர் பிடித்து உதைக்க பொதுமக்களால் போலீஸிடம் சிக்கினார்'' என்றார்கள் விசாரித்த அதிகாரிகள். மைனர் பெண் என்பதால் வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினியை புகார் தரவைத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், அந்த சிறுமியை விடுதியில் தங்கவைத்துள்ளனர்.

இதுபற்றி குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் நிஷாந்தினியிடம் பேசியபோது, ""இந்தப் பெண்மணி வேறு குழந்தைகளை இத்தொழிலில் ஈடுபடுத்தியுள்ளாரா என விசாரிக்கச் சொல்லியுள்ளோம்'' என்றார்.

அந்த பிரபல மருத்துவமனையின் ஊழியர் சங்கத்தில் உள்ள ஒருவரை ஓரம் கட்டி விசாரித்தபோது, ""சேவை செய்வதற்காகவே தொடங்கப்பட்ட மருத்துவமனை இது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்துதான் அதிகளவில் இங்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அப்படி வருபவர்கள் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள லாட்ஜ்களில்தான் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். கணவருக்கு நோய் எனில் மனைவியோ அல்லது மகளோதான் உடன் வருவார்கள். அப்படிins-nagaraj வருபவர்களுக்கு பெரும் தடையே மொழி தெரியாததுதான். மருத்துவமனைக்குள் அனைத்து மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். வெளியில் அப்படி கிடையாது.

Advertisment

இதை பயன்படுத்திக்கொள்ளும் இங்கேயே உள்ள வட இந்தியாவை சேர்ந்த புரோக்கர்கள், அங்கிருந்து வருபவர்களுக்கு லாட்ஜ்களில் தங்க ரூம் வாங்கித் தருகின்றனர். "மருத்துவமனையில் டாக்டரை பார்க்க அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கித்தருகிறேன், டெஸ்ட் எடுக்க அழைத்து செல்கிறேன்' என உதவி செய்வது போல் முதலில் அன்பாக பேசுகின்றனர். பணம் பத்தவில்லையென்றால் பணம் தருவது, பின்னர் நோயாளிக்கு துணையாக வந்த அவரது மனைவியிடமோ அல்லது மகளிடமோ நைச்சியமாக பேசி விபச்சாரத்தில் தள்ளுகின்றனர். இதுபற்றி அறிந்த மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளுக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றும் புரோக்கர்கள் யார், யார் என்கிற புகைப்பட பலகையை மருத்துவமனை முழுவதும் வைத்துள்ளது பாருங்கள்'' என நம்மிடம் காட்டியவர், ""பத்தடிக்கு ஒரு செக்யூரிட்டி நிற்கிறார்கள் மருத்துவமனை வளாகத்தில். புரோக்கர்கள் யார், யார் என்பது அவர்களுக்கு பெரும்பாலும் தெரியும், அவர்களும் கண்டுகொள்வதில்லை'' என்றார் கவலையுடன்.

vellore-port

விபச்சார கும்பலோடு நெருக்கமாகவுள்ள ஒருவரிடம் பேசிய போது... ""காந்தி ரோட்டில் இருக்கற 3 லாட்ஜ்கள் முக்கியமானவை. அதேமாதிரி அந்த லாட்ஜ்க்கு அருகில் உள்ள டீக்கடையும் முக்கிய பாய்ன்ட். அங்கிருந்துதான் தகவல் பாஸாகும். இங்க இதில் கொடிகட்டி பறக்கறதே ஆர்.என்.பாளையம் ஜாகீர், சைதாப்பேட்டை வாகீத், சங்கர் போன்ற வங்கதான். நடவடிக்கை எடுக்காதபடிக்கு போலீஸை நல்லா கவனிக்கறாங்க. அதனால அவுங்க இதையெல்லாம் கண்டுக்கறதேயில்லை'' என்றார்.

Advertisment

வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜிடம் பிரபல மருத்துவமனைக்கு வருபவர்களை ஒரு கும்பல் ஆசை காட்டி விபச்சாரத்தில் தள்ளுவதாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, ""எங்களுக்கு அது போன்ற தகவல்கள் இல்லை. எதிரே உள்ள லாட்ஜ்களில் ரெய்டு செய்கிறோம் எங்களிடம் யாரும் மாட்டுவதில்லை'' என்றார்.

இப்படி யெல்லாம்கூட கொடுமை நடக்குமா?

-து. ராஜா